பதிவு செய்த நாள்
21
நவ
2015
11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ள கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கொப்பரை தயார்: அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும், கார்த்திகை தீப திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில், முக்கிய விழா, வரும், 25ம் தேதி,. 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். அதற்காக, ஐந்தரை அடி உயரமுள்ள செம்பால் தயாரிக்கப்பட்ட கொப்பரை பழுது பார்க்கப்பட்டு, காவி நிறம் அடிக்கப்பட்டு, அதில் ஓம் நமச்சிவாய என்ற வாசகமும், அர்த்தநாரீஸ்வரர் உருவமும் வரையப்பட்டு, சிவ, சிவ என்றும் எழுதப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, 25ம் தேதி மாலையில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.
3,500 கிலோ நெய்: மஹா தீபம் ஏற்றப்படுவதற்காக, ஆவின் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய் மற்றும் 15 கிலோ எடையுள்ள, 234 டின் நெய் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது. நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், ஒரு கிலோவிற்கு, 200 ரூபாய், அரை கிலோவிற்கு, 100 ரூபாய் என, கோவில் நிர்வாக அலுவலகத்தில் செலுத்தலாம். நெய் குடம் காணிக்கையாக செலுத்த நாளை ராஜகோபுரம் எதிரில், திட்டிவாசல் அருகே நெய் காணிக்கை செலுத்த சிறப்பு பிரிவு தொடங்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு, ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு தீபச்சுடர் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.