பதிவு செய்த நாள்
27
நவ
2015
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவில், பராசக்தி அம்மனுக்கு இடபாகம் அளித்து, அர்த்தநாரீஸ்வரராய் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை போற்றும் வகையில், கமலா பீடத்தில், 108 திருநங்கைகளுக்கு, பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாமலையார் பராசக்தி அம்மனுக்கு இட பாகம் அளித்து, அர்த்தநாரீஸ்வரராய் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை நினைவு கூறும் வகையில், திருவண்ணாமலை கமலா பீடத்தில், சீனிவாச ஸ்வாமிகள் தலைமையில், 108 திருநங்கைகளை கொண்டு, சிவபுராணம் உள்ளிட்ட சிவனை போற்றும் பாடல்களை பாடி, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அப்போது பக்தர்கள், திருநங்கைகளுக்கு பாத பூஜை செய்தனர். பின் அவர்களிடம் ஆசி பெற்றனர். இதை தொடர்ந்து, திருநங்கைகளுக்கு, கமலா பீடம் சார்பில், பூஜை பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருநங்கைகளிடம் ஆசி பெற்றனர்.