பதிவு செய்த நாள்
04
ஆக
2011
10:08
சபரிமலை : நிறப்புத்தரி உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 4ம் தேதி மாலை திறக்கப்பட்டடது. உற்சவம் 5ம்தேதி காலை நடைபெறும். உற்சவம் முடிந்து, நடை இரவு அடைக்கப்படும்.கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், மாத பூஜை மற்றும் உற்சவங்களுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து, அவற்றை அய்யப்பனுக்கு காணிக்கையாக சமர்பிக்கும் நிறபுத்தரி உற்சவம் நடைபெறுவதும் வழக்கம்.
இவ்வாண்டுக்கான உற்சவம் (5ம்தேதி) சபரிமலையில் நடைபெற உள்ளது. அதற்காக, சபரிமலை கோவில் நடை (4ம்தேதி) மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டடது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். வேறு சிறப்பு பூஜைகள் ஏதும் இருக்காது. 5ம்தேதி அதிகாலை 5.30 மணிக்கும் 6.45 மணிக்கும் இடையே நிறப்புத்தரி உற்சவம் நடைபெறும்.
இதற்காக, கேரளா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த புத்தம் புதிய நெற்கதிர்களை, சபரிமலைக்கு நாளை கொண்டு வருவர். அவற்றை, பதினெட்டாம் படி அருகே சுவாமிக்கு அர்ப்பணிப்பர். அங்கிருந்து மேல்சாந்தி அவற்றை வாங்கிக் கொண்டு சுவாமிக்கு படைப்பார்.
அதன்பின், சன்னதியை சுற்றி நெற்கதிர்களால் அலங்கரிக்கப்படும். புதிய நெல்களால் இடித்து தயாரிக்கப்பட்ட அவல், சுவாமிக்கு படைக்கப்படும். தொடர்ந்து சகஸ்ரகலசாபிஷேகம், களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்), உதயாஸ்தமன பூஜை மற்றும் படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். உற்சவம் மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, 5ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
இதையடுத்து, ஆவணி மாத பூஜைக்காக, சபரிமலை கோவில் நடை, வரும் 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்