பதிவு செய்த நாள்
18
டிச
2015
02:12
விழுப்புரம்: விழுப்புரம் பகுதி பெருமாள் கோவில்களில், மார்கழி மாத உற்சவம், நேற்று துவங்கியது. மார்கழி மாத உற்சவத்தை யொட்டி, விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 7:00 மணிக்கு சாற்றுமுறையும், 8:00 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாள் தங்க கவசம் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து 8:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமிநாராயணபெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவத்தையொட்டி பெருமாள் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தை யொட்டி சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டிவனம் : திண்டிவனத்திலுள்ள பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர்கள் சீனுவாச பட்டாச்சாரியார், ராகவ பட்டாச்சாரியார், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் செய்து வருகின்றனர்.