பதிவு செய்த நாள்
19
டிச
2015
01:12
ராசிபுரம்: இறைவழிபாட்டிற்கும் உகந்த மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி, ராசிபுரம் பகுதியில் உள்ள ஆலயங்களில் வழிபாடுகள் துவங்கியுள்ளது.
இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்தால், நோய்களும் தீரும், மனம் அமைதி பெரும் என்பது இறை நம்பிக்கை. எனவே, மார்கழி மாதத்தை உன்னதமான பீடு மாதமாக கருதப்படுகிறது. ராசிபுரம் வார வழிபாட்டு மன்றம் சார்பில், 66ம் ஆண்டாக, அதிகாலை வேளையில், நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகள் துவங்கியது. இது, மார்கழி மாதம் முழுவதும் தினமும் நடக்கும்.
ஊர்வலமாக, பாடல்கள் பாடியவாறு வந்த பக்தர்களின் காலில் நீர் ஊற்றி, தேங்காய் உடைத்து,
தட்டுகளில் வெற்றிலை, பழம் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். பின்னர் மாரியம்மன்
கோவிலுக்கு சென்று, வழிபாடு நடத்திய, வார வழிபாட்டு குழுவினர், தொடர்ந்து கைலாசநாதர்
கோவிலுக்கு ஊர்வலமாக சென்று, வழிபாடு நடத்தினர். முன்னதாக ஆண்டாள், மாணிக்கவாசகருக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடினர். வார வழிபாட்டு
மன்றத்தலைவர் ஆசிரியர் குமாரசாமி, ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். பின்னர் விநாயகர்,
கைலாசநாதர், தர்மசம்வர்த்தினி, ஐயப்பன் சன்னதிகளில், பாடல்கள் பாடியவாறு சிறப்பு
வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து பொன் வரதராஜ பெருமாள் கோவிலிலும், வழிபாடுகள்
நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.