பதிவு செய்த நாள்
19
டிச
2015
01:12
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அய்யனார்கோயில், சாஸ்தா கோயில் மலைபகுதியில் மீண்டும் டிரக்கிங் துவக்கபட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய அய்யனார்கோயில் மற்றும் சாஸ்தா கோயில் பகுதிகளில் நீர்வரத்து உள்ளதால், பசுமையும்,குளுமையும் நிலவுகிறது. இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வரத்துவங்கி உள்ளனர்.குறிப்பாக சனி,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் வருகின்றனர்.
இவர்களின் நலன்கருதி வனத்துறை சார்பில், மலைபகுதியில் 2கி.மீ., தூரம் நடந்து சென்று,
வனவிலங்குகள், இயற்கை மூலிகைகள், வண்ணத்து பூச்சிகள் ஆகியவற்றை காணும் வகையில் டிரக்கிங் துவக்கபட்டுள்ளது.அய்யனார் கோயிலிலிருந்து மாவூத்து, வழுக்குபாறை, பளியர் குகை வழியாக 2மணிநேரத்தில், சூழல் மேம்பாட்டு குழுவினரின் துணையுடன் பார்த்து திரும்பலாம். இதற்காக ஒருவருக்கு ரூ.50 வசூலிக்கபடுகிறது. இதேபோல் சாஸ்தா கோயில் வனபகுதியில் 4 கி.மீ., தூரம் நடந்து சென்று பல்வேறு இடங்களை பார்வையிடலாம். இதற்கு நபருக்கு ரூ.250 வசூலிக்கபடுகிறது. ஒரு குழுவாக 25பேர் பங்கேற்றால், ரூ.2500 செலுத்தினால் போதும். இவர்களை ராஜபாளையத்திலிருந்து துறை வாகனம் மூலம், காலையில் அழைத்து சென்று மாலையில் திரும்பும் வகையில் வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.