மதுரை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் பவளக்கனிவாய் பெருமாள் எழுந்தருளியுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று மாலை மடப்பள்ளி பெரிய கதவு திறக்கப்பட்டு, பெருமாள் எழுந்தருளினார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் காலை 4.30 மணிக்கு மூலவர் சீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் முடிந்து புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் தந்தார். காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.
அழகர்கோவில் - அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. உற்சவர் அலங்காரம் முடிந்து காலை 6.15 மணிக்கு புறப்பாடு நடந்தது. காலை 6.45 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்கவாசலில் பெருமாள் எழுந்தருளினார். பின் வாசல் எதிரில் உள்ள மண்டபத்தில் சயன அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் காலை 6.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
சோழவந்தான்: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். நேற்று காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், தலைமை கணக்கர் வெங்கடேசன் செய்தனர். சோழவந்தான் ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று ரகுராமபட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். சொர்க்கவாசல் திறப்பு முடிந்து சர்வஅலங்காரத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் பரமபாத வாசல் வழியாக எழுந்தருளினார்.