சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆறு மணி நேரம் காத்திருந்த பின்னர்தான் 18-ம் படியேறி தரிசனம் நடத்த முடிகிறது. சபரிமலையில் மண்டலகாலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் 27-ம் தேதி இரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் 30-ம் தேதி மாலை 5.30 மணிக்கு மகரவிளக்கு கால பூஜைக்காக மீண்டும் நடை திறக்கும். இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே நடைதிறப்பு என்ற நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் குழந்தைகளுடன் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் படியேறுவதற்கான கியூ எப்போதும் சரங்குத்தியை தாண்டி காணப்படுகிறது. கியூவில் நிற்கும் பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.கார்த்திகை மாதம் பெரும்பாலான நாட்களில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், இனி வரும் நாட்களில் அதிக கூட்டம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.