பதிவு செய்த நாள்
22
டிச
2015
11:12
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வரும் 25ம் தேதி, ஆருத்ரா மகா அபிஷேகம், மறுநாள் அதிகாலை, கோபுர தரிசனம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் துணை கோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபையும், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் ஆகிய நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோவிலில் வரும், 25ம் தேதி ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறுகிறது. கோவில் பின்புறம் உள்ள ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் ஆருத்ரா மண்டபத்தில், இரவு, 9:00 மணி முதல், அதிகாலை, 4:00 மணி வரை (டிச., 26) உற்சவர் நடராஜ பெருமானுக்கு, 33 வகையான பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பெருமான், கோபுரம் முன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து கோபுர தரிசனம் நடைபெறுகிறது. வரும், 26ம் தேதி, காலை, 8:45 மணிக்கு சாந்தி அபிஷேகமும், பகல், 1:00 மணிக்கு அனுக்கிரக தரிசனமும் நடைபெறுகிறது.