வேலாயுதம்பாளையம்: ஆடி மாதத்தில் முக்கிய விழாவான குலதெய்வ ஆயுதங்களை காவிரி ஆற்றில் அபிஷேகம் செய்யும் ஆடிப்பெருக்கு விழா தவிட்டுப்பாளையம்- ப.வேலூர் காவிரி கரையோரங்களில் வெகு சிறப்பாக நடந்தது.காவிரி ஆற்றின் கரையோரமான பரமத்தி வேலூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் சுற்றுப்புற கிராமங்களின் நுழைவு பகுதியில் உள்ள எல்லை காவல் தெய்வம் மற்றும் குலதெய்வங்களில் சிலைகள் பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஆடிபெருக்கை முன்னிட்டு சிலைகளில் உள்ள ஆயதங்களை புனித நீரிரில் அபிஷேகம் செய்வதை பல காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு என்பதால் கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம், தவிட்டுபாளையம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள காவிரியாற்றில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வங்களின் ஆயுதங்களுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மேளதாளத்துடன் ஆயுதங்களை கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். மேலும் எல்லை காவல் தெய்வங்களின் மூலவருக்கு அபிஷேகம் செய்ய காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து சென்று வழிபாடும் நடத்தப்பட்டது.