சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன உற்சவத்தில் நடராஜர் தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதர் இருவரும் சிதம்பரத்தில் சவுந்திரநாயகி சமேத அனந்தீஸ்வரரை வழிபட்ட சிறப்பு மிக்க தலம். கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தையொட்டி சவுந்திரநாயகி அம்மன் சமேத அனந்தீஸ்வரர் சுவாமிக்கு நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் நடராஜர் பெருமானுக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், பக்தர்கள் திருவெண்பாவை பாடல்கள் பாடி மகா தீபாராதனையும் நடராஜர் மஞ்சத்தில் அமர்ந்து புறப்பாடும் நடந்தது. நடராஜர் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள்பாலித்தார்.