பதிவு செய்த நாள்
28
டிச
2015
12:12
காஞ்சிபுரம்: மத்திய அரசு, பாரம்பரிய நகரமாக, காஞ்சிபுரத்தை தேர்வு செய்து, முதற்கட்டமாக, ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோவில்களில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள, 20.17 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. இதையடுத்து, கோவில்களில், வரும் ஜனவரியில் மேம்பாட்டு பணிகள் துவங்க உள்ளன. இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலமாகவும், பாரம்பரிய நகரமாகவும், காஞ்சிபுரம் விளங்குகிறது. இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த நகருக்கு, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வருகின்றனர்.
12 நகரங்கள்: இங்குள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. குறிப்பாக, குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதிகள் இல்லை. இந்நிலையில், மத்திய அரசின், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை, இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களாக, அஜ்மீர், அமராவதி, அமிர்தசரஸ், பாதாமி, கயா, காஞ்சிபுரம், மதுரா, பூரி, வாரணாசி, துவாரகா, வாரங்கல், வேளாங்கண்ணி ஆகிய 12 நகரங்களை கடந்த ஆண்டு தேர்வு செய்து, பாரம்பரிய நகரங்களாக அறிவித்தது. இதையடுத்து, 12 வழிபாட்டு தலங்களிலும், மத்திய நகர்ப்புற இணை ஆணையர் கடந்த ஆண்டு ஆய்வு செய்தார்.
ரூ.82.17 கோடி: இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான வழிபாட்டு தலங்களில், பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும்; நகரத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், பிற துறையுடன் இணைந்து திட்ட அறிக்கை தயாரித்த மாவட்ட நிர்வாகம், மத்திய அரசுக்கு அனுப்பியது. கடந்த வாரம், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பொறியாளர் சுப்புராஜ் ஆகியோர், டில்லியில் நடைபெற்ற, தேசிய அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, காஞ்சிபுரம் நகரத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக, 82.17 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், அதில், ஏற்கனவே அறிவித்தபடி, 20.17 கோடி ரூபாயை, தற்போது விடுவிப்பதாகவும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட, 20.17 கோடி ரூபாயில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, 11.37 கோடி ரூபாயும்; வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 8.8 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அடுத்த மாதம் மேம்பாட்டுப் பணிகள் துவங்க உள்ளன. இரு கோவில்களிலும், 4.03 கோடி ரூபாயில், ஆரம்ப கட்ட பணிகள் நடைபெறவுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக... இதுகுறித்து நகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது:கடந்த, 17ம் தேதி, டில்லியில் நடந்த, தேசிய அதிகாரம் பெற்ற குழு கூட்டத்தில், நானும், பொறியாளர் சுப்புராஜும் கலந்து கொண்டோம். அதில், என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளனர். முதலில் ஏகாம்பரநாதர், வரதராஜபெருமாள் கோவிலுக்காக, 20.17 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். அதில், 4.03 கோடி ரூபாயை, முதலில் வழங்க இருப்பதாக கூறினர். அந்த நிதியில் மேற்கொள்ளவுள்ள பணிகள் வரும் ஜனவரியில் துவங்க உள்ளன. ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, கூறியுள்ளனர். இந்த பணிகள் முடிந்ததும், மற்ற பகுதிகளில் பணிகள் மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பணிகள் என்னென்ன?
* கோவில்களை சுற்றிலும் சாலைகளை அழகு படுத்துதல்
* யாத்ரீகர்கள் பொருட்கள் வைக்க பாதுகாப்பான இடம் அமைத்தல்
* மற்ற கோவில்களுக்கு செல்ல ஆட்டோ கவுன்டர்கள் ஏற்படுத்துதல்
* கோவில்களின் அருகே நவீன கழிப்பறை கட்டுதல்
* குடிநீர் வசதி ஏற்படுத்துதல்
* பக்தர்கள், கால் கழுவி விட்டு கோவிலிற்குள் செல்ல ஏற்பாடு செய்தல்
* சன்னிதியை சுற்றிலும் புரதான மின் விளக்குகள் அமைத்து அலங்கரித்தல்
* காவல் துறையினரின் கண்காணிப்பிற்காக, சிசிடிவி கேமரா வசதியை ஏற்படுத்துதல்
* கோவிலிற்குள் பக்தர்களின் இணையப் பயன்பாட்டிற்காக, வைபை வசதி.