விருதுநகர்: மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ரோப் கார் அமைக்க சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறையில் இருந்து 9 கி.மீ., உயரத்தில் சதுரகிரிமலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோயில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படுகின்றன. தாணிப்பாறையில் இருந்து அடர்ந்த வனத்தில் கரடு முரடான செங்குத்தான பாதையில்தான் இக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.ரோப் கார் வசதிமேற்கு தொடர்ச்சி மலையான சதுரகிரிமலை சாம்பல் நிற அணில்களின் வாழ்விடமாக உள்ளது. இதை சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக வனத்துறை அறிவித்து பாதுகாத்து வருகிறது.
சுவாமி தரிசனம் மற்றும் வன உயிரினங்களை பார்ப்பதற்காக ஏராளமானோர் சதுரகிரி மலைக்கு செல்கின்றனர். இதை சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை முடிவு செய்தது. இதன் முதற்கட்டமாக தாணிப்பாறையில் இருந்து சதுரகிரிமலை கோயில் வரை 9 கி.மீ., துாரம் ரோப் கார் அமைக்க முடிவு செய்தது.சர்வே பணி முடிந்ததுமதுரை மற்றும் விருதுநகர் வருவாய்த்துறையினர் ரோப் கார் அமையும் வழித்தடங்களில் இரண்டு முறை சர்வே செய்தனர். ஓய்வு பெற்ற மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஒருவர் மூலம் ரோப் கார் திட்டம் செயல் வடிவம் பெறவுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து சுற்றுலா வளர்ச்சித்துறை ஆலோசித்து வருகிறது.ரோப் கார் அமையும் பட்சத்தில் தாணிப்பாறையில் இருந்து சதுரகிரிமலையை 15 நிமிடத்தில் சென்றடைய முடியும். செல்லும் வழியில் ஜில் காற்றில் இயற்கையின் அழகு, வன விலங்குகள் நடமாட்டம், சிற்றோடைகள், நீரூற்றுக்கள், அருவிகளின் அழகை ரசித்தபடி பயணிக்கலாம். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரோப் கார் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.