பதிவு செய்த நாள்
02
ஜன
2016
03:01
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், அம்மன் கோவில் பூஜை செலவுக்காக, ஒரு கிராமத்தையே தானமாக வழங்கப்பட்டுள்ளது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
49 வரிகளில் ஆத்தூர் அருகே நத்தக்கரை கிராமத்தில் உள்ள மூப்பனார் கோவில் முன்பு,
பழங்கால எழுத்துகளுடன் இருந்த கற்பலகையை அப்பகுதிவாசிகள் வழிபாடு செய்து வந்தனர். கல்வெட்டு ஆய்வாளர்கள் வெங்கடேசன், மங்கை, வீரராகவன் ஆகியோர், இந்த கல்வெட்டு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, 16ம் நூற்றாண்டில், ஆறகளூர் பெரியநாயகி அம்மன் கோவில் பூஜை செலவுக்காக, நத்தக்கரை கிராமத்தை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது: நத்தக்கரை
கிராமத்தில், 85 செ.மீ., நீளம், 45 செ.மீ., அகலம் கொண்ட, 16ம் நூற்றாண்டில் (1585ம் ஆண்டு), 49
வரிகளில் தமிழில் எழுதப்பட்ட நிலதானம் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. விஜயநகர
பேரரசின் ஆட்சியில், நத்தக்கரை கிராமத்தில் கிடைக்கும் வரி இனங்கள் மூலம் கிடைக்கும்
தொகையை, ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் உள்ள, பெரியநாயகி அம்மன் பூஜை
செலவுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு, நத்தக்கரை கிராமத்தை தானமாக கொடுத்துள்ளனர்.
400 ஆண்டுகளாக...: இதில், கிராமத்தின், நான்கு புற எல்லைகளில் உள்ள ஊர்களின் பெயர்களும் உள்ளன. இந்த கல்வெட்டு குறிப்பிடும் தானத்துக்கு அழிவு செய்பவர்கள், சினை பசுவை கொன்ற பாவத்தை அனுபவிப்பார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பெயரும், 400 ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.