பதிவு செய்த நாள்
07
ஜன
2016
11:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் சார்பில், பள்ளி மாணவர்கள் இடையே, திருப்பாவை ஒப்பித்தல் போட்டி நேற்று, திருத்தணியில் நடந்தது. இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், தணிகேசன் திருமண மண்டபத்தில், பள்ளி மாணவர்கள் இடையே திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் பேச்சு போட்டி நேற்று நடந்தது. இணை ஆணையர் புகழேந்தி தலைமை வகித்தார். மேலாளர் பழனி வரவேற்றார். கோவில் தக்கார் ஜெய்சங்கர், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் நடுவர்களாக, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் நடராஜன், சாரங்கபாணி மற்றும் உத்திரம் ஆகியோர் பங்கேற்றனர். போட்டியில், திருத்தணி அரசினர் மேல்நிலைப் பள்ளி, கெங்குசாமி மேல்நிலைப் பள்ளி, தளபதி மேல்நிலைப் பள்ளி மற்றும் சுதந்திர மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து, பேச்சு போட்டியில், 12 மாணவர்களும், ஒப்பித்தல் போட்டியில், 23 மாணவர்களும் என, மொத்தம், 35 பேர் கலந்து கொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு விரைவில் சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.