பதிவு செய்த நாள்
12
ஜன
2016
12:01
நாகை: நாகை மாவட்டம், மாத்தூரில், சோழ மன்னரின் அரிய உருவச் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கூர், 63 நாயன்மார்களில் ஒருவரான, சிறப்புலி நாயனார் பிறந்த ஊர். இதன் அருகில் உள்ள மாத்தூரில் பழமையான சிவாலயம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அப்போது, ஆதித்தன் அல்லது பராந்தக சோழனின் உருவச்சிலை எனக் கருதப்படும் உருவ சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது. முற்காலச் சோழர் கலைப் பாணியில் அமைந்த, மேலும், சில சிற்பங்கள் அங்கு காணப்படுகின்றன.
ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியதாவது: செம்பனார்கோவில், ஆக்கூர் போன்ற திருக்கோவில்களில் காணப்பெறும் சோழ மன்னர்களின் உருவச்சிலைகளைப் போல இதுவும் முக்கியமானது. மடிப்புகளுடன் கூடிய அழகிய கீழாடையைத் தரித்த நிலையில், இறைவனை இருகரம் கூப்பி வணங்கும் கோலத்தில் இவ்வுருவச் சிலை அமைந்துள்ளது. தாடி, மீசையுடன் கம்பீரமாகத் திகழும் இவ்வுருவம், கற்பலகை ஒன்றுடன் இணைந்து காணப் பெறுவதால், முற்காலச் சோழர் கற்கோவில் ஒன்றின் சுவரில் இடம்பெற்றதாக இருத்தல் வேண்டும். தமிழகத்தில் இதுவரை கிடைத்துள்ள பல்லவ, சோழ மன்னர்களின் உருவச் சிற்பங்களின் வரிசையில் மாத்தூரில் கிடைத்துள்ள, இந்த சிற்பம் மிகுந்த சிறப்புடைய ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.