பதிவு செய்த நாள்
12
ஜன
2016
12:01
உடுமலை: உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கும் ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் திருவிழா, ஜன., 16 முதல், 18ம் தேதி வரை நடக்கிறது. விவசாயிகளின் வேண்டுதலுக்கிணங்கி, அவர்களின் கால்நடைகளை நோய் நொடியின்றி பாதுகாத்து வருகிறார் ஆல்கொண்டமால். ஆலம் உண்ட சிவன் வடிவில்
ஆல்கொண்டமால்: உடுமலையில் இருந்து செஞ்சேரி மலை செல்லும் ரோட்டில், சோமவாரப்பட்டியில் அமைந்துள்ளது இக்கோவில். உடுமலையில் இருந்து, 16 கி.மீ., துாரத்தில் உள்ள இக்கோவில் பகுதி, பல நுாற்றாண்டுகளுக்கு முன், முட்புதர்களால் சூழப்பட்டிருந்தது. இங்கிருந்த ஆலமரத்தில், கொடிய விஷப்பாம்புகள் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இம்மரத்தின் கீழ், லிங்க வடிவிலான பாம்பு புற்று ஒன்று உருவாகியுள்ளது. புற்றுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில், மேய்ந்து வந்த மாடுகள், புற்றுக்கு தானாக பாலை சொரிந்து அபிேஷகம் செய்துள்ளன. லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் தொடர்ந்து பால் சொரிவதை கண்ட முன்னோர், இது ஆயர்பாடி கண்ணனின் மகிமை தான் இது என கருதினர். ஆலம்(விஷம்) உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால், அங்குள்ள திருமாலை, ‘ஆல்கொண்டமால்’ என்று மக்கள் வணங்க துவங்கினர்.
சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு, விவசாயிகள் பால், வெண்ணை ஆகியவற்றால் அபிேஷகம் செய்து வழிபடத் துவங்கினர். துவாபர யுகத்தில் ஆயர்பாடியில், கால்நடைகளை பாதுகாக்க, கண்ணபிரான் யசோதையின் மகனாக பிறந்து அவதாரம் எடுத்தார். அந்த அவதார புருஷனின் கோவிலான ஆல்கொண்டமால் கோவிலுக்கு உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, வந்து வழிபட்டு செல்லும் பக்தர்கள், விவசாயிகளின் பசுக்கள் நீங்காத செல்வத்தை அளித்தன. அவரது திருவருளால் கால்நடைகளும் நோய் நொடியின்றி வாழ்ந்தன.