பதிவு செய்த நாள்
11
ஆக
2011
11:08
பள்ளிப்பட்டு : வேப்பமரத்தில் சில மாதங்களுக்கு முன், விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றியுள்ளதால், அந்த அதிசய வேப்பமரத்தை, அப்பகுதி மக்கள் தினமும் பார்த்து வணங்கி விட்டு செல்கின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த ஆதிவராகபுரம் கிராமம் அருகே, வயல்வெளியில் கங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனருகே அமைந்துள்ள, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரத்தில், நடுப்பகுதியில் இருந்து விழுதுகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த அதிசய வேப்பமரத்தை, தினமும் ஏராளமான மக்கள் சென்று ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கி செல்கின்றனர். இது குறித்து, அக்கிராமத்தைச் சேர்ந்த சிவா கூறும் போது, ""கிராமத்தின் அருகே உள்ள கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் மூன்றாவது வாரம், ஜாத்திரை திருவிழா நடைபெறும். மற்ற நாட்களில் இங்கு ஆட்கள் நடமாட்டம் இருக்காது. கோவில் அருகே உள்ள இந்த வேப்பமரம், கடந்த ஆண்டு காய்ந்து போனது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், வேப்பமரத்தின் நடுப்பகுதியில் இருந்து விழுதுகள் வளர்ந்து வருவதாக, அருகே விவசாய நிலத்தை சேர்ந்தவர்கள் பார்த்து, மற்றவர்களுக்கு கூறினர். மேலும், எப்போதும் ஒரு நல்லப்பாம்பு மரத்தின் கிளையில் தென்படுவதாக கூறுகின்றனர். இந்த அதிசய மரத்தில், அம்மன் சக்தி இருப்பதாக, கிராம மக்கள் நம்புகின்றனர். எனவே இந்த கோவிலை புதுப்பித்து, திருடுபோன அம்மன் சிலைக்கு பதில், புதிதாக சிலையை நிறுவி, கும்பாபிஷேகம் விரைவில் நடத்த உள்ளோம், எனக் கூறினார்.