எல்லாப் பெருமாள் கோயிலிலும் சன்னதி கருடன்தான் விசேஷமாக ஆராதிக்கப்படுவார். ஆனால் திருப்பதியில், கோயில் மதில் சுவரின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசய கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் இவர். ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடக்கின்றன. ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று மகாசுவாதி என கருடனின் ஜன்ம நட்சத்திர வழிபாடு வெகுசிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள், தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் இவருக்கு, அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவரில் சிதறுதேங்காய்களை எறிந்து உடைத்து நன்றி செலுத்துகின்றனர். இவரை வழிபட்டால் ஏவல், பில்லி, சூனியம், மனவியாதி அகலும்; சத்ருபயம் நீங்கி வளம் பெருகும்; நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.