வைத்தீஸ்வரன் கோயிலில் குடி கொண்டிருக்கும் செல்வ முத்துக்குமரனுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நரியோட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அது என்ன நரியோட்டம்? பங்குனித் திருவிழாக் காலத்தில் குழந்தை முத்துக் குமரனைத் தனியே விட்டுத் தாய் தந்தையர் சென்றுவிட, அந்தக் குழந்தையை நரி விரட்டிற்று என்றொரு தகவல் சொல்லப்படுகிறது. அந்தச் செயலினை நினைவுகூரும் வகையில் இன்றும் கோபுரவாசல் தீபாராதனை நடந்த பிறகு இருபத்தொரு வேட்டுகள் முழங்க, உடனே முத்துக்குமரனை தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். அப்போது சுவாமிக்கு முன் நரி வேடமிட்ட ஒருவன் கையில் கத்தி ஏந்திக் கொண்டு ஓட, முன்னே யானை ஓடும். பிறகு தாய் தந்தையர் நின்றிருக்கும் இடம் சென்று நிற்கும். மக்கள் இதை நரியோட்டம் என்று கூறுவார்கள்.