ஆடி அமாவாசை நாள் ஒன்றில் இறைவன் கௌசிக முனிவருக்குக் காட்சி தந்த தலம் திருப்பூந்துருத்தி. ஒருசமயம் முனிவர்கள் பலர் இப்பிறவியில் யாராலும் 13 புனித கங்கை நீரில் ஒரு சேர நீராட முடியாது என பேசிக் கொண்டனர். அதற்கு கௌசிகர் அவர்களிடம் நாம் இறை நம்பிக்கையோடு கடுமையான முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும் என்று கூறி கடும் தவம் புரிந்தார். இறைவன் அவரது தவத்திற்கு மெச்சி ஆடி அமாவாசையன்று காட்சி கொடுத்தார். அத்துடன் 13 புனித இடங்களில் பாயும் கங்கையையும் ஒரு சேர ஒரே இடத்தில் பீறிடவும் செய்தார். கௌசிகர் அந்த புனித நீரை எடுத்து இறைவனையும், இறைவியையும் அபிஷேகம் செய்து தானும் அந்த 13 புனித கங்கை நீரில் நீராடி இறைவனுடன் ஐக்கியமானார். அதனால் ஆண்டு தோறும் திருப்பூந்துருத்தி ஆலயத்தில் ஆடி அமாவாசையன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடத்துகின்றனர். இப்புனித தீர்த்தக் கட்டத்தில் நீராடி வழிபட்டு பிதுர் கடன் செய்தால் இறைவன் அதனை ஏற்றுக்கொண்டு அருள் தருவார். தஞ்சை திருக்காட்டுப்பள்ளி பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.