பதிவு செய்த நாள்
14
ஜன
2016
11:01
திருப்பூர் : ""இயற்கையை படைத்த, இறைவனே மிகச்சிறந்த ரசிகன் என, சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார். திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில் பொன் விழா ஆண்டு இசை அமுதம் நிகழ்ச்சி, வேலாயுதசாமி மண்டபத்தில் நேற்று துவங்கியது; சண்முகானந்த சங்கீத சபா தலைவர் வீரராகவன் துவக்கி வைத்தார். மாலை, 4:30 மணிக்கு, பொள்ளாச்சி முத்து வீராசாமி, சிவக்குமார் குழுவினரின் மங்கள இசையுடன், விழா துவங்கியது. பின், அம்பிகா சுரேஷ் மற்றும் ராயபுரம் கிருஷ்ணர் கோவில் குழுவினரின் விஷ்ணு சகஸ்ர நாமம் நடந்தது. பொன் விழா உரையாக, "ரசனை என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசியதாவது: பிறவியிலேயே எல்லா உயிர்களுக்கும், உணவுச்சுவை மீதான ரசனை உண்டு. தாயிடம் பால் அருந்தும் குழந்தை கூட, "உச்சு கொட்டி ரசிக்கும். இந்த ரசனை, உணவோடு மட்டும் நின்று விடக்கூடாது.
நான் என்கிற உள்ளுணர்வு அனைவருக்கும் உண்டு. இந்த உணர்வு மேலெழும்போது, அறிவு, மனம் என இரண்டாக பிரிகிறது. அறிவுப்பூர்வமாக சிந் திக்கும்போது, ரசனை போய்விடுகிறது. எதையும் ரசிக்க வேண்டுமெனில், மனமே முக்கியம். ஆயக்கலைகள், 64ஐயும் ரசிக்கலாம். விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. விமர்சகர்கள், அறிவால் பார்க்கின்றனர்; ரசிகன், மனதால் பார்க்கிறான். இந்த மனம், அலைகள்போல், எழுச்சி உடையது. அதனாலேயே, ஒருவருக்கு ஒருவர் ரசனை மாறுபடுகிறது. நாம் இதை ரசிக்கிறோம் என்பதற்காக, அதுவே சிறந்த ரசனை என எண்ணுவதோ, நாம் ரசிப்பதையே மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என, எண்ணுவதோ சரியில்லை. கடவுள் வழிபாட்டிலும் கூட, ரசனை இருக்கிறது. ஒவ்வொருவரும் தங் களுக்கு பிடித்த கடவுளையே வழிபடுகின்றனர்.
சின்னஞ்சிறிய வண் ணத்துப்பூச்சிக்குள் எத்தனையோ நிறங்களை வைத்துள்ளான், இறை வன். யாரும் பார்க்காத ஆழ்கடலிலும், அழகிய மீன்களை படைத்துள்ளன். இந்த இயற்கையை படைத்த இறைவனே, மிகச்சிறந்த ரசிகன். ஸ்ரீரங்கம் பெருமாளை போற்றும், 108 அட்சர நாமத்தில், ஒருநாமம், அவர் காவிரி கரையில் எழும் காற்றை ரசிக்கிறார், என்கிறது. இசையை ரசிக்க வேண்டும்; வேதங்களை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, சிவபெருமான், கந்தர் வர்களை தனது காதில் குண்டலமாக அணிந்துள்ளார். பாராட்டுக்கு ஏங்காதவர்கள் யாருமில்லை. பிறரை பாராட்டுவதால், அவர்களுக்கு, தலைக்கனம் கூடி விடும் என நினைக்கக் கூடாது; அதற்காக, மிகையான பாராட்டுதலும் கூடாது. பிறரை ரசிக்க வைக்கும் அதேநேரம், ரசிகர்கள் தவறு செய்யும் பட்சத்தில், திருத்தும் பொறுப்பு, கலைஞனையே சேரும். சிலர், புரியாதவற்றையும் பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்; அது, தவறு. இவ்வாறு, சுகிசிவம் பேசினார். இன்று மாலை, 4:30 மணிக்கு கோவை அபர்ணா கோபால் பாட்டு; 6:30க்கு திருச்சூர் சகோதரர்களின் பாட்டு நடக்கிறது; இதில், ராம்மோகன், ராம்குமார் மோகன் பாட்டு; ராஜிவ் முகுந்தன் வயலின்; மோகன் மிருதங்கம்; வெங்கட சுப்ரமணியம் கடம் வாசிக்கின்றனர். 18ம் தேதி வரை இசை அமுதம் நிகழ்ச்சி நடக்கிறது; அனுமதி இலவசம்.