பதிவு செய்த நாள்
14
ஜன
2016
11:01
திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், மாட்டு பொங்கல் அன்று, பார்வேட்டை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் பகுதியில், ஆற்றங்கரையோரம் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம், 2ம் தேதி (மாட்டு பொங்கல்) பார்வேட்டை விழா நடைபெறும்.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழைய சீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி, சாலவாக்கம் சீனிவாச பெருமாள் மற்றும் காவாந்தண்டலம் லட்சுமி நாராயண சுவாமி, திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாளை சந்தித்து பக்தர்களுக்கு, ஒரே நேரத்தில் ஐந்து சுவாமிகளும் அருள்பாலிப்பர். இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். மேலும், விழாவின் போது பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, வரும் 15ம் தேதி இரவு, 9:00 மணிக்கு (பொங்கலன்று) காஞ்சி புரத்திலிருந்து வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன், நேராக, பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோவிலின் மலைக்கு செல்கிறார். அங்கு, வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில், மலையிலிருந்து கீழிறங்கி, லட்சுமி நரசிம்மருடன், திருமுக்கூடல் செல்கிறார். தை 2ம் தேதி, பார்வேட்டை விழா முடிந்து, இரவு 9:00 மணியளவில் புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக, 17ம் தேதி காலை, 8:00 மணியளவில், வரதராஜ பெருமாள், மீண்டும் கோவிலை சென்றடைவார்.