பதிவு செய்த நாள்
16
ஜன
2016
02:01
உடுமலை: கால்நடைகளின் காவல் தெய்வம் ஆல்கொண்டமால் கோவில் திருவிழா,
(ஜன.,16) கோலாகலமாக துவங்குகிறது.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் எழுந்தருளியுள்ள, ஆல்கொண்டமால் கோவிலில், தமிழர் திருநாள் திருவிழா, இன்று காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜையுடன் துவங்குகிறது; ஜன., 18ம் தேதி நிறைவடைகிறது.
கால்நடைகளுக்கு நன்றிக்கடன்: கடவுளர்களுக்கு நந்தி, குதிரை, எலி, சிங்கம் போன்றவை வாகனங்களாக அமைக்கப்பட்டிருக்கும். ஆல்கொண்டமால் கோவிலில், மிக பிரமாண்டமாக பசுக்கள், காளை, ஆடுகள் என சிலைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும் இக்கோவில் வழிபாட்டு முறை எடுத்துக்காட்டுகிறது.
பூ வைத்து அருள்வாக்கு: இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் அனைத்து விேஷசங்களுக்கும் ஆல்கொண்டமாலிடம் வந்து வெள்ளை, சிவப்பு வண்ண பூக்களை வைத்து அனுமதி கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால் மட்டுமே அந்த பணியை துவக்குகின்றனர்.
கோவிலும், உற்சவரும்: ஆயர்பாடியில் பசுக்களை மேய்த்த கண்ணபிரான், பசுக்களை காக்கும் கடவுளாக திகழ்கிறார். விவசாயத்தை செழித்தோங்க செய்து வரும் ஆயர்பாடி கண்ணனுக்கு இங்கு கோவில் அமைத்துள்ளனர். தங்கம், வெள்ளி, தாமிரம், ஈயம், பித்தளை ஆகியவற்றை சரி சமமாக கொண்டு பஞ்சலோகத்தில் அழகான கலை அம்சத்துடன் பசுவுடன், புல்லாங்குழல் ஊதும் கோபாலகிருஷ்ணனை வடிவமைத்துள்ளனர்.
கொடி மரம்: சுமார், 15 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் கருட வாகனத்தில் மகாவிஷ்ணு எழுந்தருளியிருக்கும் சிலை உள்ளது. மேலும் திருமாலின் அவதாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கொடிமரத்தில் விஷ்ணு தீபம் ஏற்படுகிறது.
சன்னதிகள்: உலகின் முழு முதற்கடவுளாக திகழும் விநாயகர் சன்னதி, கோவிலின் முன் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தை சுற்றிலும் தன்னாசி சித்தர், ஆஞ்சநேயர், மகாமுனி ஆகியோருக்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.