பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய வேளாண் கல்லுாரியில் மாட்டுப் பொங்கல் விழா நடந்தது. விழாவில், வேளாண் கல்லுாரியின் நிர்வாகத் தலைவர் சுவாமி அபிராமானந்தர் பேசுகையில், “இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். பசுக்களையும், காளைகளையும், தெய்வங்களாக போற்றும் பண்பு நம்மிடையே உள்ளது. வைணவ சம்பிரதாயத்தில் பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தெய்வங்களும், தேவதைகளும், தேவர்களும் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது,” என்றார். விழாவையொட்டி கோ பூஜை நிறைவில் பசுக்கள் மற்றும் காளைகளுக்கு பொங்கல் உணவு ஊட்டப்பட்டது. விழா ஏற்பாடுகளை வேளாண் கல்லுாரி உதவி நிர்வாகத் தலைவர் சுவாமி தத்பிரபானந்தர் செய்திருந்தார். நிகழ்ச்சியில், டீன் ராஜராஜன், கல்லுாரி முதல்வர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.