சபரிமலை: சபரிமலையில் ’எழுந்தருளல் பவனி’க்கு வந்த யானை தாக்கி மூதாட்டி பலியானார். இதனால் யானை இல்லாமல் மாளிகைப்புறத்தம்மன் பவனி நடந்தது. மகரவிளக்கு முடிந்த நாள் முதல், தினமும் இரவு ௯ மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் யானை மீது சன்னிதானம் முன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். திருவனந்தபுரம் அருகே மலையின்கீழ் கிருஷ்ணன் கோயில் யானை ’ஸ்ரீவல்லபன்’, இந்த ஆண்டு பவனிக்காக வந்தது. ஜன.,15,16 ல் யானை மீது பவனி நடந்தது. ’ஸ்ரீவல்லபன்’ சன்னிதானம் தேவசம் ஊழியர் குடியிருப்பு அருகே கட்டப்பட்டிருந்தது. அப்போது பொருட்கள் ஏற்றி வரும் டிராக்டர் அதிக சப்தத்துடன் வந்தது. இதை பார்த்து யானை மிரண்டது. கால்களை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் பக்கத்தில் நின்ற பேபி, 68, என்ற பெண்ணை தும்பிக்கையால் பிடித்து, தந்தத்தால் குத்தியது. பாகன்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் இறந்தார். யானையை பார்த்து ஓடிய சிலரும் காயம் அடைந்தனர்.இதனால் யானை மீது அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கவில்லை. தேவி விக்ரகத்தை பூஜாரிகள் தோளில் சுமந்து வருகின்றனர்.’இந்த ஆண்டு யானை இல்லாமல் சடங்குகள் நடக்கும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.