பதிவு செய்த நாள்
19
ஜன
2016
12:01
ஆமதாபாத்: மத்திய அரசின், தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய, குஜராத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. தங்கத்தை, வங்கிகளில், டிபாசிட் செய்து, அதற்கான வட்டியை பெறும் திட்டம், தங்கத்தை பணமாக்கும் திட்டம் என, அழைக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சமீபத்தில், இந்த திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்துக்கு, மக்களிடையே, போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என, தகவல் வெளியானது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அறங்காவலர்களாக உள்ள, குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவிலின் அறங்காவலர் குழுக் கூட்டம், சமீபத்தில் நடந்தது.கோவிலில், தற்போது, 35 கிலோ தங்கம் உள்ளது. இதில், தினசரி பூஜைக்கான நகைகளைத் தவிர, மற்றவற்றை, தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல், பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட ஆறு அறங்காவலர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பா.ஜ., தேசியத் தலைவர்அமித் ஷா, இந்த கோவிலின் புதிய அறங்காவலராக, சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 512 கிலோதங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை, 512 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான துறைச் செயலர் சக்திகாந்த தாஸ், கடந்த வாரம் தெரிவித்தார். இதுவரை தனிநபர்கள் மட்டுமே முதலீடு செய்துள்ள தாகவும், அவர் கூறினார்.
திருப்பதி கோவிலில் 5 டன் தங்கம்:உலகின் மிகவும் பணக்கார கோவில்களில் ஒன்றான, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில், பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய, 5 டன் தங்கம் உள்ளது. கடந்த மாதம் நடந்த, தேவஸ்தான வாரியக்கூட்டத்தில், தங்கத்தை பணமாக்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இம்மாத இறுதி அல்லது பிப்ரவரியில் நடக்கும் கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. முதல் கட்டமாக, ௧.௫ டன் தங்கத்தை, மத்திய அரசு திட்டத்தில் முதலீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டம் என்ன?:* நாட்டில், கோவில்கள் உள்ளிட்ட அமைப்புகள், தனி நபர்களிடம் பயன்படுத்தப் படாத தங்கம், 3,000 டன் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது
* பயன்படுத்தாத தங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் இறக்குமதியை குறைக்கலாம் என்பதற்காக, தங்கத்தை பணமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது
* முதலீடு செய்யப்படும் தங்கத்தின் தரம் மற்றும் அளவுக்கேற்ப, வட்டி வழங்கப்படும். முதலீட்டு காலம் முடிந்த பின், அதை தங்கக் கட்டியாகவோ அல்லது பணமாகவோ பெறலாம்
* இந்த திட்டத்தின் மூலம் பெறும் வருமானத்துக்கு, மூலதன ஆதாய வரி மற்றும் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.