பதிவு செய்த நாள்
21
ஜன
2016
12:01
தர்மபுரி: தைப்பூச தேர்திருவிழாவை முன்னிட்டு, தர்மபுரி குமாரசாமி பேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில், இண்டூர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், பாப்பாரப்பட்டி பல்லூர் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் நேற்று கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு ஆட்டுக் கிடா வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 26ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை, 7.30 மணி முதல், 9 மணி வரை பெண்கள் மட்டும் மகா ரதத்தை நிலை பெயர்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குளுடன், பொதுமக்கள் மகா ரதத்தை இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இண்டூர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 26ம் தேதி மாலை, 4 மணிக்கு மகா ரதம் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பாப்பாரப்பட்டி பல்லூர் பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும், 27 ம் தேதி மதியம் 2.30 மணிக்கு, மகா ரதம் இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.