பதிவு செய்த நாள்
22
ஜன
2016
11:01
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. நாளை பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது. தைப்பூசவிழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜன.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு பழநிமலைக்கோயில், திருஆவினன்குடி உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு மின்விளக்கு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரியநாயகியம்மன் கோயிலில் காலையில் சப்பரத்தில் உலா வருவார். இரவு 7.30 மணிக்கு முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து, ஆடு, வெள்ளி காமதேனு, யானை வாகனங்களில் ரதவீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கிரிவீதியில் காவடி, பால்குடங்களுடன் ஆட்ட, பாட்டத்துடன் வலம்வந்து மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (ஜன.,23ல்) திருக்கல்யாணமும், ஜன.,24ல் தைப்பூசத்தை முன்னிட்டு மாலை 4.25 மணிக்கு நான்குரத வீதிகளிலும் தேரோட்டம், விழாவின் நிறைவுநாளான ஜன.,27ல் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடக்கிறது. விழாநாட்களில் குடமுழுக்கு நினைவரங்கத்தில் பக்திசொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.