பதிவு செய்த நாள்
22
ஜன
2016
11:01
நிரந்தரமில்லா பலவற்றுக்காக ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களுக்கு, பக்கத்து வீட்டு முகங்களுடன் பழகுவதற்கெல்லாம் எங்கே நேரம். போத்தனுார், ஸ்ரீ சக்தி நாராயணன் நகர் வீதி இல்லத்தரசிகள் இதில் விதிவிலக்கு. இப்பகுதியைச் சேர்ந்த இல்லத்தரசிகள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, சமத்துவ லட்டு எனும் பெயரில், 10 ஆயிரம் லட்டுக்களை ஒரே நாளில் செய்து அசத்தியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி கூறுகையில்,இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை போக, டிவியே கதி. பலரும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் பேசி, பழகுவதற்கெல்லாம், நேரம் ஒதுக்குவதே இல்லை. ஆனால், எங்கள் பகுதியில் இப்படிப்பட்ட நிலை இல்லை. எங்க ஏரியா மக்களை ஒன்றிணைத்தோம். எல்லோரும் ஒரு குறிப்பிட்ட தொகை போட்டு, எல்லோரும் சேர்ந்து லட்டு தயாரித்து, அதை பழநி பக்தர்களுக்கு வழங்குவது என, முடிவு செய்தோம். இப்போது எங்கள் குழுவில், 30 பேர் உள்ளனர். ஒரு நாள் முழுவதும் அனைவரும் ஒரே வீட்டில் தங்கி, லட்டு தயாரிப்பில் ஈடுபடுகிறோம். இது எங்களுக்கு ஏழாவது ஆண்டு. இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம், மலையாளி, குஜராத்தி என அனைவரும் இதில் பங்கேற்பதால், இதற்கு, சமத்துவ லட்டு என பெயர் வைத்துள்ளோம். இதை, பழநி பாதயாத்திரை செல்லும் அனைவருக்கும் வழங்க உள்ளோம், என்றார்.