பதிவு செய்த நாள்
22
ஜன
2016
11:01
மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம், திரிபுரந்தர சுந்தரி அம்மன் கோவிலுக்கு, நன்கொடையாளரால் வெள்ளி கவச தேர் செய்யும் பணி, நேற்று முன்தினம் மாலை துவக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம், மலைக்குன்றில், வேதகிரீஸ்வரர் எழுந்தருளி அருள்புரிய, நிலபரப்பில் அமைந்த பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், திரிபுரசுந்தரி அம்மன் எழுந்தருளி அருள்புரிகிறார். பிரம்மோற்சவம் மற்றும் பிற உற்சவங்களின்போது, கோவில் உட்பிரகாரத்தில் அம்மன் வலம் வருவார். அப்போது, அவரை தோளில் சுமந்து செல்வர்.இந்நிலையில், உற்சவத்தின் போது வெள்ளிக்கவச தேரில், அவரை வலம் வர வைக்க கருதிய பக்தர்கள் சிலர், நன்கொடையாக, 11 அடி மரத்தேர் உருவாக்கி, வெள்ளிக்கவசம் பொருத்த முடிவெடுத்தனர்.இத்தேர் பணிக்கு, நேற்று முன்தினம் கோவிலில், பணி துவக்க வழிபாடு நடந்தது. செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.