பதிவு செய்த நாள்
23
ஜன
2016
11:01
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மனுக்கு, பூஜை செய்து வந்த கேரளத்தை சேர்ந்த நம்பூதிரிகள், கோவிலை விட்டு வெளியேறி சொந்த ஊருக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. மூலவர் சிவபெருமானுக்கு, படம்பக்க நாதர் என்று பெயர். அவரை சிவாச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கண்டுகொள்ளவில்லைஅதேநேரம், வடிவுடையம்மனை, கேரளத்தைச் சேர்ந்த, திருமணம் ஆகாத நம்பூதிரிகள் பூஜை செய்கின்றனர். இந்த நடைமுறை, 800 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வருகிறது. இந்த நடைமுறையை ஆதிசங்கரர் துவக்கி வைத்தார் என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வரை, வடிவுடையம்மனை, கேசவன், மது, உன்னி, ஜெயக்குமார் ஆகிய நான்கு நம்பூதிரிகள் பூஜை செய்து வந்தனர். இவர்களுக்கு தனி சம்பளம் கிடையாது. தட்டில் விழும் காணிக்கை மற்றும் குங்கும அர்ச்சனை காணிக்கையில் மட்டுமே உரிமை உண்டு.
பணிப் பளு காரணமாக, மேலும் இரண்டு நம்பூதிரிகளை, பணியில் சேர்த்துக் கொள்ள, அவர்கள் கோவில் நிர்வாகத்திடம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முறையாக விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, வடிவுடையம்மன் சன்னிதியில், அதிக வருவாய் வருவதால், கருவறைப் பணியை, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மேற்கொள்ள சிவாச்சாரியார்கள் விரும்பியதாகவும், நம்பூதிரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவி வரும் இந்த பிரச்னையை கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ௧௫ம் தேதி, பொங்கல் தினத்தன்று சிவாச்சாரியார்கள், அத்துமீறி வடிவுடையம்மன் கருவறைக்குள் புகுந்து பூஜை பணிகளை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் நம்பூதிரிகள் கருவறையில் இருந்து வெளியேறி விட்டனர். தற்போது அவர்கள் கோவிலில் இல்லை. தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
பிரச்னையே இல்லை: இதுகுறித்து கேட்டபோது,எங்களுக்கு இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது கூடுதல் பணியாக எங்களுக்கு, வடிவுடையம்மன் சன்னிதிப் பணியும் அளிக்கப்பட்டுள்ளது என, சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர். கோவில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலைய துறை துணை கமிஷனரும் ஆன, லதா கூறியதாவது:நம்பூதிரிகள் வெளியேறியது உண்மை தான். அதற்கு காரணம் நம்பூதிரிகளில் ஒருவரான கேசவன் என்பவருக்கு, காலில் அடிபட்டு இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற சொந்த ஊருக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் சிகிச்சை முடிந்து வந்த பின்னர் கோவில் பணிகளை தொடர்வர்.இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில், திருச்செந்துார், ராமேஸ்வரம், திருவொற்றியூர் போன்ற ஒரு சில கோவில்களில் மட்டும் வெளிமாநில அர்ச்சகர்கள், பூஜை செய்வது, வழக்கத்தில் உள்ளது. அந்த வழக்கத்தில் தலையிட்டு பிரச்னையை ஏற்படுத்தியது, திருவொற்றியூர் வடிவுடையம்மன் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.