பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஊர்க்காவல் படை மற்றும் போலீசார் சார்பில், ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தைப்பூசத்தையொட்டி முருகப்பெருமானுக்கு பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் விரதமிருந்து, பாத யாத்திரையாக பழநிக்கு சென்று வருகின்றனர். கோவையிலிருந்து வரும் பொள்ளாச்சி முக்கிய சாலையே பயன்படுத்தி வருகின்றனர். வெயிலுக்கு முன், காலையில் நடந்து செல்லும் பக்தர்கள், ஆங்காங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து பயணத்தை துவக்குகின்றனர். குடும்பம்... குடும்பமாகவும், நண்பர்கள் கூட்டமாகவும் வருகின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்ததும், மாலை நேரத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் பயணிகள் ரோட்டோரம் நடந்து செல்கின்றனர்.
இரவில் இவர்கள் நடந்து செல்லும் போது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதததால், அவதிப்பட்டு வருகின்றனர். ரோட்டோரம் நடந்து செல்லும் போது வாகனங்கள் வேகமாக வரும் போது கவனச்சிதறலால், பக்தர்கள் மீது மோதும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்; பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் சார்பில், ஒளிப்பட்டை ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி ஊஞ்சவேலாம்பட்டி அருகே நடந்தது. எஸ்.ஐ., பரமேஸ்வரன், ஊர்க்காவல்படைப்பிரிவு தளபதி ராஜசேகரன், துணைப்படைத்தளபதி ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், நடைபயணமாக வந்த பக்தர்களுக்கு அதை ஒட்டினர். நிலவேம்பு கஷாயம்: பொள்ளாச்சி வழியாக பழநிக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்கு, கோலார்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் தமிழ்மணி தலைமை வகித்தார். கோலார்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கலைச்செல்வி, சித்தா மருத்துவர் கோகிலா தேவி முன்னிலை வகித்தனர்.