பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
வேலாயுதம்பாளையம்: புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. கரூர் அடுத்த, வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. பாலசுப்பிரமணிய சமேத வள்ளி, தெய்வானை சுவாமிகள் அமர்ந்திருந்த அலங்கரிக்கப்பட்ட தேர் பக்தர்கள் முதல் நாள், மலைவீதியில் இருந்து காந்திநகர் வரை இழுத்து வந்து நிலை நிறுத்தினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் இரண்டாம் நாளாக, மறு தேர் இழுத்தல் துவங்கியது. காந்தி நகரில் நிலை கொண்டிருந்த தேரை பக்தர்கள் கந்தம்பாளையம் வழியாக வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வழியாக தேர் வீதிகளில் பவனி வந்து தேர் மலை அடிவாரத்திற்கு இழுத்து நிலை நிறுத்தினர். இரண்டு நாள் தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த காவடி, பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி என்று பல்வேறு காவடிகளை எடுத்து வந்ததுடன் அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல் என்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி சுவாமியை வழிபட்டனர். நேற்றிரவு, குதிரை வாகன திருவீதியுலாவும், இன்று கொடியிறக்கம், நாளை விடையாத்தியும், 29ம்தேதியுடன் திருவிழா நிறைவடைகிறது.