பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
ஈரோடு: ஈரோடு கோட்டை சின்னபாவடி பத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. கோட்டை, ஈஸ்வரன் கோவில்வீதி, பிருந்தா வீதி, தெப்பகுளம் வீதி, தில்லைநகர், வாசுகிவீதி, செங்குந்தர் வீதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள், சிவப்பு ஆடைகள் அணிந்து தீர்த்தம் சுமந்து, ஊர்வலமாக வந்தனர். கருங்கல்பாளையம், ஓங்காளியம்மன் கோவில் வீதி, நேதாஜி ரோடு, கொங்காலம்மன் கோவில், மணிக்கூண்டு, பி.எஸ்., பார்க் வழியாக தீர்த்தக்குடங்கள் கோவிலை வந்தடைந்தது. இதை தொடர்ந்து மூலவர் பத்ரகாளியம்மனுக்கு, காவிரி தீர்த்த அபிஷேகம், அதன் பின் சிறப்பு அலங்காரம், தீபாரதனை, நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு அக்னி கவாளமும், நாளை குண்டம் பற்ற வைத்தல், நாளை மறுநாள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.