பதிவு செய்த நாள்
27
ஜன
2016
12:01
அஹமது நகர்: மஹாராஷ்டிர மாநிலம், அஹமது நகரில், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறையை மீறி, சனி பகவான் கோவிலுக்குள் நுழைய முயன்ற, 500க்கும் மேற்பட்ட பெண்களை, கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் நிலவுகிறது. மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் அஹமது நகர் மாவட்டத்தில், புகழ் வாய்ந்த சனி பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள், பல ஆண்டுகளாக, பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை நீக்கி, கோவிலுக்குள் அனுமதிக்க வலியுறுத்தி, பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். புனே நகரில் உள்ள பெண்கள் அமைப்பைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், குடியரசு தினமான நேற்று, சனி பகவான் கோவிலுக்குள் நுழைய திட்டமிட்டனர்; ஆறு பஸ்களை ஏற்பாடு செய்து, அஹமது நகரை நோக்கி, அந்த பெண்கள் பயணித்தனர். ஆனால், 40 கி.மீ., துாரத்துக்கு முன், அந்த பெண்களை, ஏராளமான கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்பினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.