பழநி : பெரியகலையம்புத்தூர் மகாலட்சுமி அம்மன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்தினர். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி செலுத்துவர். இவ்விழா ஆக.. 11 ல் துவங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன், ரத ஊர்வலம் நடந்தது. நேற்று காலை நேர்த்தி செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தலைமை பூசாரி அருள் தலைமையில், சேர்வை ஆட்டத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது. பக்தர்களின் தலையில், தேங்காய் உடைத்தனர். சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.