இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வெள்ளி அலங்காரத்தில் அருள் பாலித்தார். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளி , செவ்வாய் , ஞாயிற்று கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். ஓவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இந்த ஆண்டும் ஆடி வெள்ளியில் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு அம்மன் நாள் முழுவதும் வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்புத்தூர்: திருப்புத்தூர் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழா வை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள் காலை முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்தியை நிறைவேற்றினர்.பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை, நடந்தது. அம்மனுக்கு வெள்ளிக்கிரீடம் அணிந்து திரிசூலம் ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.