பதிவு செய்த நாள்
28
ஜன
2016
11:01
உடுமலை: கும்பாபிேஷக விழாவுக்கான பணி, திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் துவங்கியுள்ளது. உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம், திருமூர்த்தி மலையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிேஷகம், 2002ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்தாண்டு கோவில் கும்பாபிேஷகம் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில், பிப்., மாதம் கும்பாபிேஷகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது; இதற்கான பணி முழுவீச்சில் நடக்கிறது. அமணலிங்கேஸ்வரர் சன்னதி, விநாயகர், முருகன் சன்னதிகளில், மேற்கூரை தட்டு ஓடுகள் பதித்தல் மற்றும் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. கோவில் செயல் அலுவலர் வெற்றிச் செல்வன் கூறுகையில், கும்பாபிேஷக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை; ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்படும். கோவில் மராமத்து பணி, தற்போது நடந்து வருகிறது, என்றார்.