பதிவு செய்த நாள்
29
ஜன
2016
10:01
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடந்தது.
திருச்செந்துார் முருகன் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும். மூலவர் பிரதிஷ்டை தினத்திலும், கும்பாபிஷேகம் நடந்த ஆனி மாதத்திலும் வருஷாபிஷேகம் நடக்கும். நேற்று மூலவர் பிரதிஷ்டை தினமான தை உத்திரத்தில் வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 க்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலவேளை பூஜைகள் நடந்தது. காலை 6.30 மணிக்கு கும்ப பூஜை நடந்தது. 8.30 மணிக்கு முதலில் மூலவர், சண்முகர் விமானத்திற்கும், வள்ளி, தெய்வாணை விமானத்திற்கும், பெருமாள் விமானத்திற்கும் புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அனைவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு குமரவிடங்க பெருமான், வள்ளி, தெய்வானையுடன், மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது. இரவு 7 மணிக்கு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.