பதிவு செய்த நாள்
29
ஜன
2016
12:01
தஞ்சாவூர்: தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று நடந்த பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள, சத்குரு தியாகராஜர் நினைவிடத்தில், ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடந்து வருகிறது. 169வது ஆண்டு ஆராதனை விழா கடந்த, 24ம் தேதி மாலை துவங்கியது.தொடர்ந்து, தினமும் இன்னிசை கச்சேரி, வாய்ப்பாட்டு நடந்து வருகிறது. ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நேற்று நடந்தது. தியாராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின், மங்கள இசை துவங்கியது. காலை, 9:00 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் சேர்ந்து பாடி, இசை அஞ்சலி செலுத்தினர். இதில், சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், மஹதி, ஷோபனா, அருண் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று, கீர்த்தனைகளை பாடினர். இரவு, 8:00 மணிக்கு மல்லாரியுடன் வீதி உலா நடந்தது. பாடகி சுதா ரகுநாதன் கூறுகையில், அனைவரும் தனித்தனியாகப் பாடினாலும், பஞ்சரத்ன கீர்த்தனையை அனைவரும் ஒரே குரலில் ஒலிக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பாடினால், ஆண்டு முழுவதும் புத்துணர்வு அளிக்கும் விதமாக இருக்கிறது, என்றார்.