பதிவு செய்த நாள்
30
ஜன
2016
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணி, 19 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கியது.காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் சுற்றுச்சுவர், 600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் மேல்பகுதி சேதமடைந்து, மழை தண்ணீர் அதில் இறங்குவதால், வெடிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க 19 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணி (ஜன.,29) துவங்கியது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு, தெற்கு மதில் சுவர் சீரமைக்கப்பட்டது. மற்ற கிழக்கு, மேற்கு, வடக்கு மதில் சுவர்களை சீரமைக்க, கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. பணிக்கான உத்தரவு கிடைத்தவுடன், நேற்று மதில் சுவரை சீரமைக்க, சாரம் கட்டும் பணி நடந்து வருகிறது. பழமை மாறாமல், சுண்ணாம்பு கலவையால் சீரமைக்கபட உள்ளது.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், 2014ம் ஆண்டு, மூன்றாம் பிரகாரத்தின் தரை தளம், கல் பதித்து சீரமைக்கப்பட்டது. அந்த நிதியில் மீதம் இருந்த நிதி, இந்த பணிக்காக ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த மாதத்திற்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.