பதிவு செய்த நாள்
30
ஜன
2016
01:01
பொங்கலூர்: பொங்கலூர் அருகே சின்னாரியபட்டியில் உள்ள மங்களாம்பிகை உடனமர் மாதவீஸ்வர சுவாமி கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. மன்னர்கள் ஆண்ட காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம். பின், கொங்கு நாட்டை ஆண்டு வந்த குறுநில மன்னன் உடையப்பன் என்பவர், குழந்தை வரம் வேண்டி, இக்கோவிலை புதுப்பித்து சிவனை வேண்டியதால், குழந்தை வரம் கிடைத்ததாக வரலாறு.
மகா விஷ்ணுவான மாதவனே, தனக்கு குழந்தையாக பிறந்ததாக எண்ணி, உடையப்பன் வழிபட்டார். அதனால், இங்குள்ள சிவன் மாதவீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். அஸ்திவாரமே இல்லாமல், அனைத்து சன்னதிகளும் பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள திருக்காவடி கம்பம், ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது. நிலத்துக்குள் உள்ள அடிப்பாகத்துடன் சேர்த்து, 42.5 அடி உயரத்துக்கு ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ளது. இதனால், இக்கோவிலுக்கு கம்பத்து ஈஸ்வரன் கோவில் என்ற பெயரும் உண்டு. இக்கோவில் வளாகத்தில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
இந்த சிவாலயம் பல ஆண்டுகளாக பூஜை செய்யப்படாமல், சிதிலமடைந்து காணப்பட்டது. சில மாதங்களுக்கு முன், சேக்கிழார் பேரவையை சேர்ந்த பக்தர்களால் உழவாரப்பணி செய்யப்பட்டது. பொதுமக்களின் முயற்சியால், இக்கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.