திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவினை தொடங்கும்போது, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவம் நடத்திய பிறகுதான், அண்ணாமலையார் கோவில் தீப திருவிழா கொடியேற்றம் நடத்தப்படுவது வழக்கம். முக்கியம் வாய்ந்த துர்க்கையம்மன் கோவில் தற்போது ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நன்கொடையாளர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கோவில் வளாகத்தில் விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக சாந்தி, யாக சாலை பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு கலசத்தில் உள்ள புனித நீரை கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.