பதிவு செய்த நாள்
30
ஜன
2016
01:01
புதுக்கோட்டை: மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும், காட்டுபாவா பள்ளிவாசலில், சந்தனக்கூடு விழா விமரிசையாக நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில், 10 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது காட்டுபாவா பள்ளிவாசல். கி.பி., 17ம் நூற்றாண்டில், அரேபிய நாட்டைச் சேர்ந்த சையதுபக்ருதீன் அவ்லியா எனும் மகான், திருமயத்துக்கு அருகிலுள்ள காட்டில் தங்கியிருந்தார். இவர் நாகூர் தர்காவில் அடக்கமாயிருக்கும் ஷாகுல்அமீது அவ்லியாவின் பேரன். அப்போது, காட்டு வழியே குழந்தைகளுடன் சென்ற பிராமண பெண்களை, 14 கள்வர்கள் வழிமறித்தனர். அவர்களுடன் சண்டையிட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, சில காலம் வாழ்ந்த பாவா மரணமடைந்தார். பாவா அடக்கமான இடத்தில், அப்பகுதி மக்களால் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகளுக்கு ஆர்காடு நவாப் முகமதலியும், அவரது பரம்பரையினரும் கொடையளித்தனர். புதுகை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும், இந்த தர்காவுக்கு நிதியுதவி செய்தனர். 1696-ல் கிழவன் சேதுபதி காலத்தில், இந்த தர்காவுக்கு கொடை வழங்கிய செய்தி இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இப்பள்ளிவாசலில், ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா முஸ்லிம்கள் - இந்துக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 15 நாட்கள் தினமும் சிறப்பு தொழுகை நடந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில் மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு ஊர்வலம், வாண வேடிக்கைகளுடன் நடந்தது. பொன்னமராவதி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி ஆகிய ஊர்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.