பதிவு செய்த நாள்
02
பிப்
2016
06:02
மதுரை: சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேதாந்த பிரச்சாரம் செய்துவிட்டு, 1897 ஜனவரி 26ஆம் தேதி கப்பலில் தமது சீடர்களுடன் பாம்பன் வந்தார். பாம்பன், இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் மதுரைக்கு 1897 பிப்ரவரி 2ஆம் தேதி வருகை புரிந்தார்.விவேகானந்தர் வருகை புரிந்த பிப்ரவரி 2ஆம் தேதியை நினைவு கூறும் விழா மதுரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் 2.2.2016ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தனது தலைமையில் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்:
சுவாமி விவேகானந்தர் உயர்ந்த மனிதர்களை உருவாக்குவதையே, தன் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார். நாம் நட்டுப்பற்று உடையவர்களாக வாழ வேண்டும், மற்றவர்களையும் நாட்டுப்பற்று உடையவர்களாக வாழச் செய்ய வேண்டும். நாம் நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும், மற்றவர்களையும் மக்களுக்குத் தொண்டு செய்வதில் நாம் ஈடுபடுத்த வேண்டும். நாம் சிறந்த ஆன்மிகவாதிகளாக இருக்க வேண்டும், மற்றவர்களையும் ஆன்மிகவாதிகளாக நாம் விளங்கச் செய்ய வேண்டும். நாம் சுவாமி விவேகானந்தரைப் பின்பற்றினால், மகத்தானவர்கள் ஆவோம் மற்றவர்களையும் மகத்தானவர்கள் ஆக்குவோம். நெருப்பில் போடப்பட்ட இரும்பும் நெருப்பின் தன்மை பெறுகிறது. ஸ்பரிசவேதியைத் தொடும் இரும்பும் தங்கமாகிறது. அதுபோல், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை மனதில் பதித்து செயல் வடிவம் தருபவர்கள் நிச்சயம் உயர்வு பெறுவார்கள். இரும்பைத் தங்கமாக மாற்றும் ஸ்பரிசவேதி போன்று, சாதாரணமானவர்களையும் அசாதாரணமானவர்களாக சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் மாற்றியிருக்கின்றன.
நீங்கள் இறைவனின் குழந்தைகள்; உங்களால் எதையும் சாதிக்க முடியும். உச்ஞிட ண்ணிதடூ டிண் ணீணிtஞுணtடிச்டூடூதூ ஞீடிதிடிணஞு என்ற வேதாந்தத்தின் அடிப்படை உண்மையை நமக்கு சுவாமி விவேகானந்தர் உணர்த்தினார். நாம் இளைஞர்களிடம் பேசிப் பார்க்கும்போது, அவர்கள் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் சுவாமி விவேகானந்தர் என்று அறிந்துகொள்ள முடிகிறது. நாம் அனைவரும் சுவாமி விவேகானந்தரின் கருத்துகளுக்கு, நமது வாழ்க்கையில் செயல் வடிவம் கொடுக்க முற்பட வேண்டும். இதை நாம் அவரவர் இருக்கும் இடத்திலிருந்து டாக்டர் போன்ற மனநிலையிலிருந்து செயல்படுத்த வேண்டும். சுவாமி விவேகானந்தர் எங்கே இருக்கிறார்? அவர் உங்களில் இருக்கிறார், உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார், உங்கள் பின்னால் இருக்கிறார், நாம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார். அவரைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனிடமும் சுவாமி விவேகானந்தர் இருக்கிறார். சுவாமி விவேகானந்தரை இந்தியாவின் ஏழைமக்களிடமிருந்து பிரிக்க முடியாது. அவர் அந்த அளவுக்கு இந்திய ஏழை எளியவர்களுக்காக மனம் உருகினார். சுவாமி விவேகானந்தர், மற்றவர்களின் நன்மைக்காக நீ உன் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் பொது நன்மைக்காக நீ உன் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்தை வாய்ப்புள்ள போதெல்லாம் கூறியிருக்கிறார். அதுவே அவருக்கு மிகவும் பிடித்த கருத்தாகும்.
சுவாமி விவேகானந்தர், தியாகமும் தொண்டும் இந்தியாவின் தேசிய லட்சியங்கள் என்று கூறியிருக்கிறார். இந்திய மக்களை நோக்கி இவ்விதம் சுவாமி விவேகானந்தர் அறைகூவல் விடுத்தார்: பலரின் நன்மைக்காகவும், அனைவரின் சுகத்திற்காகவும், உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்துகொண்டுதான் ஆக வேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நூறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள். பெரியவர்கள் பெருந் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை நீ உலக வரலாறு முழுவதிலும் காணலாம். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்துவிட விரும்பினால் அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதில்லை. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்துவிட விரும்புகிறாயா? அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகிவிடுவாய். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்.
எந்தவிதமான சுயநல நோக்கமும் இல்லாமல், பணம், புகழ் மற்றும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகவே தொண்டு செய்பவன்தான் சிறப்பாகப் பணியாற்றுகிறான். இத்தகைய மனநிலையில் ஒருவன் பணியாற்ற வல்லவனாகும்போது, அவன் ஒரு புத்த பகவான் ஆகிவிடுவான். உலகத்தையே மாற்றி அமைக்கக்கூடிய வகையில் வேலை செய்யும் சக்தி அத்தகையவனிடமிருந்து வெளிப்படுகிறது. மக்களுக்கு உதவி செய்வதற்கு நாம் யார்? எல்லாம் வல்ல இறைவன் ஒருவன் மட்டுமே மக்களுக்கு உதவி செய்ய முடியும். மக்களுக்கு உதவி செய்வதற்கு நமக்கு என்ன ஆற்றல் இருக்கிறது? நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் மக்களுக்குப் பணிவுடன் தொண்டுதான். அப்படி தொண்டு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு ஆண்டவனுக்கு நீ நன்றி சொல் என்கிறார் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரை விட்டால் இந்தியாவை உயர்த்துவதற்கும், இந்து மதத்தைக் காப்பதற்கும் பொருத்தமான வேறு யாரும் இல்லை என்று கூறலாம். சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய்ந்ததுடன், இந்தியாவின் எழுச்சிக்கான வழிகளையும் ஆராய்ந்து, செயல்படுத்த முற்பட்டார் இந்திய மக்களாகிய நம்மையும் அவ்விதம் செயல்படும்படி தூண்டினார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் வழி நடத்துபவராக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். இப்போதும் இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் வழி நடத்துபவராக சுவாமி விவேகானந்தர்தான் விளங்குகிறார். 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மறுமலர்ச்சிக்கும், இந்துமதத்தின் மறுமலர்ச்சிக்கும் சுவாமி விவேகானந்தர் பிள்ளையார் சுழியாக அமைந்தார் அவரே 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் விடிவெள்ளியாகவும் திகழ்ந்தார். இன்று இந்தியாவில் மனித வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய தலைவர்களும், ஊடகங்களும் மேன்மேலும் நமது வாழ்க்கையில் சிக்கல்களை அதிகப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில், புதிய இந்தியா உருவாக வேண்டும், இந்தியா மறுமலர்ச்சி பெற வேண்டும், இந்தியா உலக அரங்கில் முதலிடம் பெற வேண்டும், இந்தியாவில் ஆக்கபூர்வமான எழுச்சிகள் ஏற்பட வேண்டும் என்று இன்றைய இந்திய இளைஞர்கள் நினைக்கிறார்கள். இவர்களை இன்று இந்தியாவில் வழிநடத்தக் கூடியவர்களாக இருப்பவர் யார்? என்று நன்றாக, மிகவும் நன்றாக யோசித்துப் பார்த்தால் சுவாமி விவேகானந்தரை விட்டால் இந்தியாவிற்கு வேறு கதிமோட்சம் இல்லை என்று தோன்றுகிறது. பலரும் இப்போது இவ்விதம் நினைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும், இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நிரந்தர பாதுகாப்பாக இருந்துகொண்டிருக்கின்றன. இந்திய விடுதலைப்போர் தோன்றுவதற்கும், இந்திய விடுதலை எழுச்சிக்கும் சுவாமி விவேகானந்தரின் கருத்துகள்தான் அடித்தளம் அமைத்துத் தந்தன. அதைத் தொடர்ந்து எண்ணற்றவர்கள் செய்த தியாகத்தால் இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இந்து மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர் சுவாமி விவேகானந்தர், இந்திய மக்களிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர், இந்துமதத்தில் ஓர் எழுச்சிக்கு வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர். இந்துமறுமலர்ச்சி என்பதை ஆரம்பித்து வைத்தவரே சுவாமி விவேகானந்தர்தான். மதுரை சொற்பொழிவில் கூறியது ..
1. கடலைப் போன்று மிகவும் ஆழ்ந்தும், வானத்தைப் போன்று பரந்தும் இருக்கும் இதயமே நமக்கு வேண்டும்.
2. உலகிலுள்ள வேறு எந்த நாட்டினரைவிடவும் நாம் முற்போக்குடன் இருப்போம்; அதே சமயத்தில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும், பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம்.