200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கழுமலையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2016 01:02
மயிலாடுதுறை: சீர்காழியில் 200 ஆண்டுகளுக்கு பிறகு கழுமலையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் குருமூர்த்தமாக தோணியப்பரும், சிவமூர்த்தமாக பிரம்மபுஸ்வரரும், சங்க மூர்த்தமாக சட்டைநாதரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இத்தலம் திருஞானசம்பந்தர் அவதரித்தருளிய 67 தேவாரதிருப்பதிகங்களையும், அப்பர் அருளிய 3 திருப்பதிகங்களையும், சுந்தரர் அருளிய திருப்பதிகங்களையும் பெற்றது. இத்தலத்திற்கு கழுமலம் என்ற புராண பெயர் உள்ளது. இங்கு ஓடும் நதி கழுமலை ஆறு. மேலும் இங்கு பராசக்திக்கு காவல் தெய்வமாக துணை புரிந்த கழுமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு மிக்க தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயிலின் உபகோயிலான கழுமலையம்மன் கோயில் கடந்த 200 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்யப்படாமல் மிகவும் சிதிலமடைந்திருந்தது.
இதனை அடுத்து தருமபுரம் ஆதின குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் படி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் 31ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி இன்று காலை நான்காம் காலத்துடன் முடிந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து அம்பாள் விமானத்தை அடைந்தது. ஆங்கு தருமை ஆதின கட்டளை விசாரணை மத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திவைக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை மாத்ருபூதம் சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் எம்எல்ஏ. சக்தி, வர்த்தக சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சட்டைநாதர் கோயில் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் கோயில் ஊழியர்கள்; செய்திருந்தனர்.