மயிலாடுதுறை: நாகை மாவட்டம், குத்தாலம் அருகே மேலத் திருமணஞ்சேரியில் அமைந்துள்ள சுகந்த குந்தலாம்பிகை என்கிற மலர்குழல் நாயகி உடனுறை ஐராவதேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமையன்று யாக சாலை பூஜை தொடங்கப்பட்டு நான்கு கால பூஜையின் நிறைவில் பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பட்டது. சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து, மேளதாளங்கள் முழங்க, கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்தனர். வேதமந்திரங்கள் முழங்க, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. செந்தில்குமார் சிவாச்சாரியார், சுப்பிரமணிய சிவாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் புரவலர் அருணாசலம் செய்திருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.