பதிவு செய்த நாள்
04
பிப்
2016
01:02
கும்பகோணம்: மகாமக விழாவை முன்னிட்டு, பிப்.,18 முதல், பிப்.,24 வரை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து கும்பகோணத்துக்கு, 200 சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கும்பகோணம் பிரம்ம தீர்த்தேச்சுரர் கோவிலின் மகாமக விழா, பிப்.,22ல் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கும்பகோணத்துக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, பிப்.,18 முதல் பிப்.,24 வரை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து கும்பகோணத்துக்கும், அங்கிருந்து பிற நகரங்களுக்கும், 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து, 100 சிறப்பு பஸ்கள் கும்பகோணத்துக்கு இயக்கப்படுகிறது. இது தவிர, கும்பகோணம், விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, நெல்லை கோட்டங்களில் இருந்து தலா, 10 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு, பிப்.,10 முதல் துவங்குகிறது.
விரைவுப் போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கும்பகோணம் மகாமகத் திருவிழாவை ஒட்டி, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து கும்பகோணத்துக்கு இயக்கப்படும், முன்பதிவு வசதி கொண்ட வழக்கமான பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்து விட்டது. அதை அடுத்து, சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவுப் போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கும், பிற கோட்டங்களின் சார்பில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து கும்பகோணத்துக்கு, 200 சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இது தவிர கும்பகோணம் நகருக்குள் இயங்கும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை, அந்த கோட்ட நிர்வாகம் அதிகரிப்பு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.