பதிவு செய்த நாள்
22
பிப்
2016
12:02
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி, பிப்., 21 அதிகாலை நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என, திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிப்., 21 முன்தினம், காலை, யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நள்ளிரவு, 1:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் மலைக்கோவிலில் வீதியுலா வந்தார். அப்போது, இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், 100க்கும் மேற்பட்டோர் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். பின், நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், பக்தர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர். நேற்று, காலை, 6:00 மணிக்கு கேடய வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:00 மணி கதம்பப் பொடி விழாவும், இரவு, 8:00 மணிக்கு ஆறுமுக சுவாமிக்கு உற்சவ விழா நடந்தது. இன்று, கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.